இரண்டே நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் - தட்டித் தூக்கிய தவெக!
உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நாட்களே ஆனநிலையில், கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பிப்ரவரியில் கட்சி தொடங்கியதும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரோ என சந்தேகங்கள் எழுந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.
இடைப்பட்ட இந்த இரண்டு வருடங்களில் தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதே இலக்கு என சமீபத்தில் விஜய் தெரிவித்திருந்தார். இதற்காக உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலியில் வாக்காளர் அடையாள எண் மற்றும் செல்ஃபி அல்லது படங்களை இணைத்து கொடுத்து உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்.8) உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் செயலி தொடங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.