For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

02:46 PM Oct 07, 2024 IST | Web Editor
விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிக மிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்த முறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் 5 விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement