“போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” - இபிஎஸ் வலியுறுத்தல்!
“போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்ட போது காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிக காப்பீடு இழப்பீடு பெற்றுத் தந்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரி குளங்களை தூர்வாரச் செய்து மழைக்காலத்தில் நீர் சேகரித்து வைக்கப்பட்டது. கோடைகாலத்தில் விவசாயிகள் நிலத்திற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தினார்கள். குடிநீர் பஞ்சமும் இல்லாமல் இருந்தது.
இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சம்பவ இடத்திலேயே மூன்று பேரில் இறந்ததாகவும் செய்தி ஊடகத்தில் வந்திருக்கிறது. இன்னும் சில பேர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வருகிறது. கிட்டத்தட்ட 40 பேர் இந்தக் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத்திலும் பலமுறை சொல்லியிருக்கிறேன் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்; கள்ளச்சாராயத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று, ஆனால் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அப்பாவி மக்கள், ஏழை மக்கள் கள்ளச்சாராயம் அருந்தி விலை மதிக்க முடியாத உயிரை இழந்து இருக்கிறார்கள்'' என்றார்
அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா கொடுக்?. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீ என்ட்ரி. 2021இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்''
இரட்டை இலைக்கு எதிராகப் போட்டியிட்டவர் ஓ. பன்னீர்செல்வம். பலாப்பழத்தை வைத்து மத்திய அமைச்சராக முயற்சி செய்தார். எந்த காலத்திலும் அவர் யாருக்கும் விஸ்வாசமாக இருந்தது கிடையாது. அனைத்திலும் சுயநலம். மக்கள் அவருக்கு சரியான தண்டனை வழங்கி உள்ளனர். அவரை எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்..?" என்றார்.