விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த போக்குவரத்து துறை!
தமிழ்நாட்டில் விதிகளை மீறி இயங்கி வந்த 5 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.
வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டிருந்தது.
அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என கடந்த 12-ம் தேதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பின்னர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையாலும், முன்பதிவு செய்திருந்த பயணிகளாலும் நேற்று காலை வரை தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயங்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், விதிமீறி தமிழ்நாட்டில் இயங்கிவரும் வெளி மாநில ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து தற்போது வரை ஐந்து ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.