பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு - விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு!
இன்று சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பாஜக சார்பில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகிறார். இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை முன்னேற்பாடாக சென்னையின் முக்கிய சாலைகளில் இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிரதமர் வருகையொட்டி மாநகர காவல்துறை ஏப்ரல் 29-ம் தேதி வரை சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் நரேந்திர மோடி கல்பாக்கம் செல்கிறார். அங்கு அணு உலை மேம்பாடு திட்டத்தை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி மீண்டும் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக, பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனத்திற்கு வருகை தருகிறார். மாலையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின், பிரதமர் மோடி தெலங்கானாவுக்கு செல்கிறார்.