நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் அளித்துள்ள பதிலில், “டிசம்பர் 1-ம் தேதி வரை, 5 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 856 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மாவட்டம் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் இந்திய நீதித்துறையில் 26,568 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 1,114 நீதிபதிகள் வரை வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என அவர் பதில் அளித்துள்ளார்.