யானை தந்தத்தை விற்க முயன்ற 5 பேர் கைது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள போடி ஜமின் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் என்பவர் தனக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள யானை தந்தத்தை மதுரை வளர் நகர் பகுதியில் வைத்து விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வளர்நகர் பகுதிக்கு சென்ற வனத்துறையினர், யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற முகவர்களான ரமேஷ், மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பெரிய யானையின் தந்தத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் -17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.
இதனிடையே நூற்றாண்டு பழமையான யானை தந்தம் விற்பனை செய்த வழக்கில் போடி ஜமின் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.