பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் திறப்பு | கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.
பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப அவை அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
அதன்படி, சென்னை பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. தற்போது நீர்வரத்து வினாடிக்கு 40,000 கன அடியாக உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.