பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 44 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணத்திற்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறு மார்க்கமாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயக்கப்படும் 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.
இதையும் படியுங்கள் : 21 தமிழக மீனவர்கள் கைது - மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை!
இதையடுத்து, இன்று சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் இன்று ஒருநாள் மட்டும் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் 7 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், இரவு 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை அட்டவணை இன்று ஒருநாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.