2023-ல் இந்தியாவில் 41 லட்சம் கார்கள் விற்பனை - அதிகமான கார்களை விற்று மாருதி சுஸுகி அசத்தல்!
இந்தியர்கள் கடந்த ஆண்டு 41 லட்சத்திற்கும் அதிகமான கார்களை வாங்கியுள்ளதாகவும், அதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களையே பெரும்பாலானோர் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 41.08 லட்சம் கார்களை இந்தியர்களை வாங்கியுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 8.3% அதிகம். இந்த எண்ணிக்கை உற்பத்தியாளர்களிடம் இருந்து, விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கையில் பாதியாகும். 2022-ல் வாகனங்களின் சராசரி விலை ரூ.10.58 லட்சமாக இருந்த நிலையில், 2023-ல் ரூ.11.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் வாகன விற்பனையில் எந்த வீழ்ச்சியும் இல்லை.
வாகன உற்பத்தி சந்தையில் முன்னணி நிறுவனங்களான மாருதி சுஸுகி, ஹுண்டாய் மோட்டார் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை உச்சம் தொட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : 5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை - மத்திய அரசு தகவல்
2023 ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் 20 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளன. அதேபோல் 2.69 லட்சம் கார்களை ஏற்றுமதியும் செய்துள்ளது மாருதி சுஸுகி. அந்த நிறுவனத்தின் வரலாற்றில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹூண்டாய் மோட்டார்ஸ் 7.65 லட்சம், டாடா மோட்டார்ஸ் 5.53 லட்சம், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் 2.33 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.