"திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்" - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்று வரை புதிய ஆணையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைத்தல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காத்துக் கிடக்கும் நிலையில், அந்த ஆணையத்தை அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் வீ.பாரதிதாசன் தலைமையில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆணையத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. அதன்பின் நவம்பர் 17-ஆம் தேதியிலிருந்து புதிய ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்காமல் திமுக அரசு தாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரின் நலன்களைக் காப்பதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக சட்டநாதன் தலைமையிலும், அம்பாசங்கர் தலைமையிலும் இரு ஆணையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன்பின் 1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரை 15 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு வகையான ஆணையங்களும் ஒரே மாதிரியான நோக்கம் கொண்டவை என்றாலும் கூட, அவை இரண்டும் அமைக்கப்பட்ட முறைகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். முதலில் அமைக்கப்பட்ட இரு ஆணையங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற தேவைக்காக அமைக்கப்பட்டவையாகும். அவற்றின் பணி முடிந்தவுடன் அந்த ஆணையங்கள் காலாவதியாகிவிடும்.
அவற்றுக்கு உறுதி செய்யப்பட்ட பதவிக்காலம் கிடையாது. ஆனால், 1990களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஆணையங்களுக்கு உறுதி செய்யப்பட்ட பதவிக்காலங்கள் உண்டு. அந்த ஆணையங்கள் 1992-ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப் பட்டவை ஆகும். இந்த ஆணையங்கள் நிரந்தர ஆணையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதனால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒரு வாரத்திற்கும் மேலாக காலியாக இருப்பதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்கும் பெரும் பொறுப்பு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உண்டு. கடந்த 2022-ஆம் ஆண்டு நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்த்தல் அல்லது நீக்குதல், இந்த பட்டியல்களை மாற்றியமைத்தல், சமூக, கல்வி பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை மேம்படுத்துதல், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினரின் உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரைத்தல், அதற்கு தேவையான பொருத்தமான, நிகழ்கால தரவுகளைத் திரட்டுவதற்காக சுதந்திரமான கணக்கெடுப்புகளை மேற்கொள்ளுதல், தமிழக அரசால் அவ்வப்போது வழங்கப்படும் சமூகநீதி சார்ந்த பணிகளை செய்தல் ஆகியவை தான் தமிழக அரசு வழங்கிய பணிகள் ஆகும்.
அவற்றில் ஒன்றைக்கூட, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிறைவேற்றவில்லை. அந்த வகையில் பார்த்தால், திமுக ஆட்சியும், அண்மையில் காலாவதியான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூன்றாண்டு பதவிக்காலமும் சமூகநீதியின் இருண்டகாலமாகவே பார்க்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிந்துரைக்குபடி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி அரசு ஆணையிட்டது. அதன்பின் ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த 16-ஆம் தேதி நிறைவடையும் வரை 1040 நாள்களாகிவிட்ட போதிலும் ஆணையம் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை.
அந்த வகையில் பதவிக்காலம் முடிவடைந்த ஆணையம் பயனற்ற ஆணையம் தான். ஆனாலும், சமூகநீதிக்கான அமைப்புகள் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் சமூகநீதி உயிர் வாழும். கடந்த ஆணையத்தின் சமூகநீதி செயல்பாடுகள் முடங்கிக் கிடந்ததற்கு காரணம் அதன் தலைவரும், உறுப்பினர்களும் மட்டும் அல்ல. தமிழக அரசும் தான். வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிவிடக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருந்தது. அதனால் தான் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால், அதையும் தாண்டி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் சமூகநீதிக் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்பார்ப்பு ஆகும். எனினும், ஏமாற்றம் தான் பரிசாகக் கிடைத்தது.
சமூகநீதியை வென்றெடுப்பது தொடர்ச்சியான போராட்டம் ஆகும். எத்தனை ஏமாற்றங்கள் கிடைத்தாலும், நிச்சயமாக சமூகநீதிக்கு வெற்றி கிடைக்கும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். ஆனால், அதையும் சிதைக்கும் வகையில் புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்காமல் இருப்பதன் மூலமாக வன்னியர்களுக்கு எதிரான சமூகநீதியை படுகொலை செய்ய எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதை திமுக அரசு நிரூபித்துள்ளது. திமுகவின் இந்த துரோகத்தை மன்னிக்க முடியாது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட ஏராளமான சமூகநீதிக் கடமைகளை நிறைவேற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கட்டாயத் தேவை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திமுக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக சமூகநீதியில் அக்கறை கொண்ட, சமரசம் செய்து குணம் இல்லாதவர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.