“10 மாதங்களில் 40 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 39 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 18 மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
தொடர்ந்து காணொளி வாயில் மூலம் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 8.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், மதுரை, கடலூர், தருமபுரி, நாகப்பட்டினம் , நாமக்கல், திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், இராமநாதபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 18 முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
“இந்த ஆண்டில் 40 தொகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அவை பயன்பாட்டிற்கு வரும். இளம் வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்க ஸ்டார் அக்காடமி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளையாட்டு அரங்கம் என தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது. 38 பயிற்சியாளர்கள் இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய விளையாட்டுகளை காக்கும் வகையில் கன்னியாகுமரியில் ஆராய்ச்சி அமையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கட்டமைப்பு அமைக்கப்படுவது மட்டும் இல்லாமல் போட்டிகளுக்கு செல்லும் முன்பே உதவி தொகை சாம்பியன்ஸ் பவுடன்டேஷன்
மூலம் வழங்கப்படுகிறது. வெற்றி பெற்ற பின் உடனடியாக ஊக்கத்தொகை
வழங்கப்படுகிறது.
அரசு உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. நீங்கள் விடா முயற்சியுடன் உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.