சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் - ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில குற்றத் தடுப்புப் பிரிவு (சிஐடி) போலீஸாரால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை விசாரணை செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 23, 24-ஆம் தேதிகளில் அவரிடம் சிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனர்
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் இரு முறை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனு தொடர்பான விசாரணை விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 19ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூர் கலவர வழக்குகளில் அவரின் 3 முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 8ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ஆந்திர உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.