திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி - தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஜெயின் பாவா தெரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். அவரது மனைவி பர்கத் நிஷா. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் முட்லூர் பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில் அதே உணவகத்தில் வீரம்மாள் என்ற பெண்மணியும் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, ஷேக் இஸ்மாயிலுக்கும், வீரமாலுக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பர்கத் நிஷா பலமுறை ஷேக் இஸ்மாயிலை கண்டித்துள்ளார்.
மேலும் கள்ளத்தொடரில் இருந்த வீரம்மாள் மற்றும் அவரது மகன் அகில் ராஜ் இருவரையும் அவதூறாக பேசி திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பர்கத் நிஷாவை தீர்த்துக்கட்ட வீரம்மாள் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கள்ளக்காதலி வீரம்மாள், அவரது மகன் அகில்ராஜ், நண்பர் அஜய் மூவரும் கொலை திட்டத்தை தீட்டி உள்ளனர். இதற்கு ஷேக் இஸ்மாயிலும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீரம்மாளின் மகன் அகில்ராஜ், அவரது நண்பர் அஜய் ஆகியோர் இரவு வேலை முடித்து வீட்டிற்கு சென்ற பர்கத் நிஷாவை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த சால் மூலம் கழுத்தை நெறித்து தலையின் பின் பக்கத்தில் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பர்கத் நிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொலையை விபத்து நடந்தது போல் சித்தரித்து தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
ஆனால் காயங்கள் இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார் பெண்ணின் கணவர் ஷேக் இஸ்மாயிலிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது கள்ளகாதலால் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஷேக் இஸ்மாயில், கள்ளக்காதலி வீரம்மாள், வீரமாளின் மகன் அகில்ராஜ், அவரது நண்பர் அஜய் உள்ளிட்ட நான்கு பேரையும் பரங்கிப்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.