For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

02:47 PM Mar 15, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு
Advertisement

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய  4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி,  மாநிலத்தில் நகர்ப்புர மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும்.  தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

விரைவான நகரமயமாக்கல்,  நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும்,  குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது.  மாநிலத்தின் நகர்ப்புர பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க,  இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.

இதனடிப்படையில் அரசு பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புரத் தன்மை கொண்ட,  விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள்,  பாதுகாக்கப்பட்ட குடிநீர்,  ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கி வருகிறது.

இதன்படி இந்த ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம்,  கடலூர்,  கும்பகோணம்,  கரூர்,  சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து,  மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,  வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை,  கோயில் நகரமான திருவண்ணாமலை,  தொழில் நகரமான நாமக்கல்,  கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும்,  அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள்,  ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.

இதன்படி, பு துக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி;  திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள்,  அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி.  நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி;  காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம்,  புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள்,  பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர். சுற்றுலாப் பயணிகள். வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement