சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 4 வழி மேம்பாலம் - நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்!
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய 4 வழி மேம்பாலம் கட்டப்படவுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டும், அதற்கான பணிகளை மேற்கொண்டும் வருகின்றன. அந்த வகையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கி, நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளத்திலும், 15 மீட்டர் அகலத்திலும் கட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2,860 சதுரமீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகிறது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அதிகாரிகள் மூலம் இவை நடத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும். இந்த மேம்பாலம் கான் கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது.
ரெயில்வே மேம்பாலங்களுக்கு இதுபோன்ற இரும்பு உத்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும். இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.