வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பீகாரின் தலைநகர் பாட்னாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் வழக்கம்போல் நேற்று (அக்.2) இரவு கோரக்பூரில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து, இந்த ரயில் இன்று (அக்.3) அதிகாலை 4 மணியளவில் பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஜக்பனி - கதிஹர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது, 5 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அவர்கள் மீது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயில் மோதியது. இதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது, மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற ஒருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.