4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு - ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!
கடந்த 2021ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பேரணி நடத்தினர். அந்த பேரணியில், அப்போதைய மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பத்திரிக்கையாளர் ஒருவர் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில் இவ்வகாரம் தொடர்பாக அப்போதைய மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 2023 ஜனவரி மாதம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2024 ஜூலையில் வழக்கமான ஜாமின் வழங்கப்பட்டது.
ஆனால், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. குறிப்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சரின் மகனுக்கு நெருங்கிய நபர் ஒருவர் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்து வருவதால் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையின் அறிக்கைகள் உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்து, ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்ப பெற மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் உத்தரப்பிரதேச காவல்துறை மேற்கொண்டு வரும் விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.