அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்?
அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.
அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுதீஷ் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியை தேமுதிக கேட்கவில்லை எனவும், மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்கு பிறகு பேசிக் கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.