3வது டி20 போட்டி: இலங்கை அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் எடுத்துள்ளது. எனவே, இலங்கை அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது வரை 2 டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3வது டி20 கிரிக்கெட் போட்டி, இலங்கையின் பல்லிகலெ மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இந்த போட்டியில் ரிஷப் பந்த்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்து வரும் சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்திலும் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். சுப்மன் கில் 39 ரன்களும், ரியான் பராக் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 137 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.