3-வது T20: சூப்பர் ஓவரில் இலங்கையை அசத்தலாக வென்ற இந்திய அணி!
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இன்றைய மூன்றாவது போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஓபனிங் வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் களமிறங்கினர்.
2 பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுடன் முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் வெளியேறினாலும், நிதானமாக ஆடி ஸ்கோரை ஏற்றினார் கில். அதன் படி 15 ஓவர் வரை நின்று ஆடி 39 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு இறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு ரன் கூட எடுக்காமல் அதிர்ச்சி கொடுத்தார். ரிங்கு சிங் 1 ,சூர்யகுமார் யாதவ் 8, ஷிவம் டுபே 13, ரியான் பராக் 26, வாஷிங்டன் சுந்தர் 25, ரவி பிஷ்னோய் 8 என 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
137 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ஓபனர்களாக இறங்கிய பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ் இருவரும் நிதானமாகவே ஆடினர். நிசாங்கா 26 ரன்களில் வெளியேறவே, அடுத்து இறங்கிய குசல் பெரேரா மற்றும் நிசாங்கா இணைந்து அணியின் ஸ்கோரை ஏற்றினர். ஆனால் அடுத்தடுத்து இறங்கிய வீரர்களால் இலங்கை அணியின் இறங்குமுகம் தொடங்கியது.
சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, தீக்ஷனா என யாரும் சோபிக்க வில்லை. இதனால் தொடர்ந்து தடுமாறிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 137 ரன்கள் அடித்து மேட்சை டிரா செய்தது. இதனையடுத்து வழங்கப்பட்ட சூப்பர் ஓவரில் களமிறங்கிய இலங்கை அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இறங்கிய இந்திய அணி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.