3ம் கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயகக் கடமையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26-ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து, 3ம் கட்டத்தில் குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று (மே 7) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
2ம் கட்ட வாக்குப்பதிவின் போது மத்தியபிரதேச மாநிலம் பெத்துல் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதாகவும் எனவே மொத்தம் 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்த குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மோசமான வானிலை காரணமாக 3-வது கட்டத்தில் தேர்தல் நடைபெற வேண்டிய ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எனவே, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), டையூ-டாமன் (2), கோவா (2), குஜராத் (25), கர்நாடகா (14), மத்திய பிரதேசம் (9), மகாராஷ்டிரா (11), உத்தர பிரதேசம் (10), மேற்குவங்கம் (4) ஆகிய 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கோவா மற்றும் குஜராத்தில் மக்களவைத் தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
आज तीसरे चरण का मतदान है।
मैं देशवासियों से आग्रह करूंगा कि मतदान एक सामान्य दान नहीं है, हमारे देश में दान का एक महात्म्य है और उसी भाव से देशवासी ज्यादा से ज्यादा मतादान करें।
- पीएम श्री @narendramodi pic.twitter.com/MBYZBdwQgc
— BJP (@BJP4India) May 7, 2024
இதில் குஜராத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வாக்கு உள்ளது. இதனையடுத்து அகமதாபாத்தில் உள்ள நிஷன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க பிரதமர் மோடி குஜராத் வந்தார். இன்று காலை வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் முன்பே தனது காரில் இருந்து இறங்கியவர் சாலையில் நடந்து வந்தார். அங்கு இரு புறமும் கூடியிருந்த மக்கள் மோடியை பார்த்து உற்சாகமாக கை அசைத்தனர். மோடியும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் தனது அடையாள அட்டையை காண்பித்தார். தொடர்ந்து விரலில் மை வைத்து பிறகு பிரதமர் மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.