3வது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்த இலங்கை அணி!
இலங்கைக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து, ரோகித் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகிறது. கொழும்புவில் கடந்த ஆக. 2-ம் தேதி நடந்த முதல் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் முடிந்தது. தொடர்ந்து, 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஆக. 7) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - பெர்னாண்டோ களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தது. நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்னாண்டோ சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அசலங்கா 10, சதீரா 0, ஜனித் லியனகே 8, துனித் வெல்லலகே 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் பொறுப்புடன் விளையாடிய குசல் மெண்டீஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.