வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 3,500 பேரிடம் மோசடி - இளைஞர்களை தட்டி தூக்கிய புதுச்சேரி போலீசார்!
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்தியா முழுவதும் 3500 நபர்களை ஏமாற்றிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 4 இளைஞர்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம் முகதூல் மூலம் பேசிய இளைஞர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி ரூ.17 லட்சத்தை ஏமாற்றியுள்ளனர். இதனையடுத்து இவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரின் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த போலீசார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுபம் ஷர்மா, தீபக் குமார், ராஜ் கவுண்ட், மற்றும் நீரஜ் குர்ஜார். ஆகிய பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இந்தியா முழுவதும் 3500 நபர்களிடம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், இரண்டு பாஸ்போர்ட், போலி ஆதார் அட்டைகள், ஒரு சொகுசு கார் மற்றும் ரூ.41 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புதுச்சேரி மக்கள் கடந்த 7 மாதங்களில் இணைய வழியாக ரூ.13 கோடி இழந்துள்ளதாக சைபர் க்ரைம் முதுநிலை கண்காணிப்பாளர் கலைவாணன் தகவல் தெரிவித்துள்ளார்.