For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாநில காவல் துறைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

10:35 AM Dec 11, 2023 IST | Web Editor
மாநில காவல் துறைகளில் மகளிருக்கு 33  இடஒதுக்கீடு வழங்க வேண்டும்   மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
Advertisement

மாநில காவல் துறைகளில் மகளிருக்கு 33 சதவித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 

Advertisement

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு செய்ய முடியாது என்பதால் மத்திய அரசு பணிகளில் மகளிருக்கென தனி ஒதுக்கீடு செய்ய இயலாது. மேலும், மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் காவல்துறைப் பணிகளில் மகளிருக்கு 33 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் அவர்களின் உரிமையையும் உறுதி செய்யும் வகையில், பல மாநில அரசுகளில் அரசுப் பணி நியமனங்களில் மகளிருக்கு 30 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,  'மத்திய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறைகளிலும் 30 சதவீத இடஒதுக்கீடு செய்ய முன்வருமா?' என கேள்வி எழுப்பினர்.

டி.ஆர்.பாலு வின் கேள்விக்கு மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்து பேசியதாவது, "பட்டியல் இனத்தவர், பழங்குடியினத்தவர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு முறையே 15 சதவீதம், 7.5 சதவீதம், 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்திரா சாவ்னி வழக்கில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனைத்து யூனியன் பிரதேசங்களின் காவல் துறை பணியிடங்களில் பட்டியல் இன, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளது. இதே போன்று மத்திய ஆயுதக் காவல் படைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

அனைத்து மாநில காவல்துறை பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 33 சதவீதம் மகளிருக்கு பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மேலும் ராணுவம், சைனிக் பள்ளி போன்றவைகளிலும் பெண்கள், பெண் குழந்தைகளை மையப்படுத்தி பல முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு மத்திய அரசுப் பணிகளில் மகளிருக்கான விடுப்பு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement