ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவில் சிக்கி பக்தர்கள் பலி - பிரதமர் மோடி இரங்கல்!
ஜம்மு - காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கத்ராவுக்கு அருகிலுள்ள திரிகுடா மலையில் வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் பாரம்பரியமாக கத்ராவிலிருந்து 13 கி.மீ நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் பெய்து வரும் கனமழை அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இந்த நிலையில் வைஷ்ணவி தேவி கோயில் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.மேலும் நிலச்சரிவில் சிக்கிய பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வானிலை ஆய்வு மையமானது ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஓரிரு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரிடருக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தளப்பதிவில்,
”வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிர்வாகம் உதவி செய்து வருகிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கும் எனது பிரார்த்தனைகள்”
என்று தெரிவித்துள்ளார்.