டிக்கெட் கேன்சல் வாயிலாக ரயில்வேக்கு இவ்வளவு லாபமா? சமூக ஆர்வலர் வெளிக்கொண்டுவந்த அதிர்ச்சி தகவல்!
காத்திருப்பு பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட் ) இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் மக்களின் பணம் கிடைத்திருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்திடம் சில தகவல்களை பெற்றுள்ளார். அதில், 2021 ஆம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த 2 கோடியே 53 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து இந்திய ரயில்வேக்கு 242 கோடியே 68 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The #IndianRailways clocked earnings of ₹1,230 crore from cancelled waiting list tickets, including tatkal (between yr 2021 to jan 2024) Reveals #RTI filed by me.
👉 Why railways charge cancellation fee even when passengers don't get a seat ? Another money making strategy ? pic.twitter.com/JmOLse8VGp
— Dr Vivek Pandey (@Vivekpandey21) March 20, 2024
2022 ஆம் ஆண்டில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 4 கோடியே 60 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 439 கோடியே 16 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் 5 கோடியே 26 லட்சம் டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததில் 505 கோடி ரூபாய் ரயில்வேக்கு கிடைத்திருக்கிறது.
2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 45 லட்சத்து 86 ஆயிரம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதன்மூலம், இந்திய ரயில்வேக்கு 43 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. ரயில் பயணத்தை பயணிகள் அதிகம் விரும்பும் நிலையில் தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், 720 இருக்கைகள் உள்ள ஒரு ரயிலுக்கு 600 இருக்கைகள் வரை காத்திருப்பு பட்டியலை வழங்குவது ஏன்? எனவும் கேள்வி முன்வைக்கப்படுகிறது.