நடிகை ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ குறித்த விசாரணையை தொடங்கியது மத்திய அரசு!
நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த மார்பீங் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக அமிதாப்பச்சன் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஷ்மிகா ’புஷ்பா 2’, ’அனிமல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து மார்பிங் செய்த, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலான நிலையில், deep fake தொடர்பான விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் deep fake-ஐ கையாள்வதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசரத் தேவை உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பின்னர், ராஷ்மிகா மந்தனாவும் தனது சமூக வலைதளத்தில் இந்த மார்பீங் வீடியோ குறித்து வருத்தத்துடன் விளக்கம் கொடுத்திருந்தார். நாகசைதன்யா, சின்னமயி, கே.கவிதா உள்ளிட்ட பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் பெண்களை ஆபாசமாக சித்தரித்து DEEP FAKE வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.