பஞ்சாபில் 3 பயங்கரவாதிகள் கைது - துப்பாக்கிகள் பறிமுதல்!
பஞ்சாபில் 3 பயங்கரவாதிகளை அந்த மாநில காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவருக்கும் கடந்த வாரம் காவல் சோதனைச் சாவடியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது,
“அமிர்தரசஸில் பதுங்கியிருந்த இந்த மூவரையும் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, அவர்களில் ஒருவர் போலீஸார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்தார். அதைவைத்து மிரட்டி மூவரும் தப்பியோட முயன்றனர். அதனைத் தடுத்த காவல் துறையினரை நோக்கி சுட்டுவிட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இருவர் மீது குண்டுகள் பாய்ந்தன. காவல் துறை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குண்டு காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட மூன்று துப்பாக்கிகள், அவற்றுக்கான தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை வெளிநாட்டில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இயக்கி வந்துள்ளனர். துபாயில் இருந்து இவர்களுக்கு நிதி வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் திட்டியுள்ளனர். இப்போது மூவரும் கைது செய்யப்பட்டுவிட்டதால் பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.