சிறுமலையில் கிடந்த உடல்... வெடித்து சிதறிய வெடிபொருள்... காவலர்கள் உள்பட 3 பேர் காயம்!
திண்டுக்கல் அருகேசிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனத்துறையினரின் Watch Tower அருகே ஜே எம் ஜே என்பவருக்கு சொந்தமானபட்டாக்காட்டில் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய பகுதிக்கு சென்று பார்த்த பொழுது ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அந்த ஆண் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆனதால் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் இறந்த நபரின் அருகில் பேட்டரி வயர் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதை போலீசார் பார்த்தனர். பிறகு அந்த மர்ம வெடி பொருளை எடுக்க முற்பட்டபோது அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு வனத்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனைடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் சிறுமலையை சேர்ந்தவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.