3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) ஆகிய 3 சட்டங்கள் முறையே, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) என பெயர்மாற்றம் செய்து, அவற்றில் பல்வேறு சட்டதிருத்தங்களை மத்திய அரசு செய்தது. இந்நிலையில், மாற்றம் செய்த இந்த 3 சட்டங்களும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் வைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்து ஆங்கிலத்தில் மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாட்டில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி அலுவல் மொழியாக உள்ளதாகவும் 56.37 சதவிகித இந்தியர்களுக்கு இந்தி தாய் மொழி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் ‘போலே பாபா’ பெயர் மிஸ்ஸிங்!
இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்றும் யாருடைய அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், சட்டங்களுக்கு பெயரிடும் விவகாரம் நாடாளுமன்றத்தின் முடிவு என்றும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.