வயிற்றுக்குள் உயிருடன் இருந்த 3 செ.மீ கரப்பான்பூச்சி... 10 நிமிடத்தில் அகற்றிய மருத்துவர்கள்!
23 வயது இளைஞரின் குடலில், உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை எண்டோஸ்கோப்பி மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில், இளைஞரின் வயிற்றில் இருந்து உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மேம்பட்ட எண்டோஸ்கோபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 10 நிமிடங்களில் அகற்றியதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சையின் சில நாட்களுக்கு முன்பு தொருவோரக் கடையில் உணவு உண்டுள்ளார். இதனால் கடுமையான வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ளார். 3 நாட்கள் தொடர்ந்து வயிற்று வலியால் தவித்த நிலையில், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் மேல் இரப்பை குடலில் எண்டாஸ்கோப்பி செய்யப்பட்டுள்ளது. அதில் நோயாளியின் சிறுகுடலில் கரப்பான்பூச்சி இருந்தது தெரியவந்தது.
உடனடியாக தாமதிக்காமல் எண்டாஸ்கோப்பி முறையை கையாண்டு 10 நிமிடத்தில் வயிற்றில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 செமீ நீளம் கொண்டதாக இருந்தது.
மிக சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததால் இளைஞர் காப்பாற்றப்பட்டு உள்ளார். சாப்பிடும் போது கரப்பான்பூச்சியை இளைஞர் விழுங்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.