2738 ரோஜாக்களுடன் தோழியிடம் காதலை கூறிய ஒலிம்பிக் வீரர்!
காதல் நகரமான பாரிஸில் 2738 மஞ்சள் ரோஜாக்களுடன், தோழியிடம் ஒலிம்பிக் வீரர் ஒருவர் தனது காதலை கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் போட்டி விறுவிறுப்பாக செல்ல மறுபக்கம் பல சுவாரசியமான காதல் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒலிம்பிக் வீரர் ஒருவர் தோழியிடம் தனது காதலை சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒலிம்பிக்கின் படகோட்டும் போட்டியில் முதன்முறையாக அமெரிக்காவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த குழுவில் ஒருவரான வீரர் ஜஸ்டின் பெஸ்ட், காதல் நகரமான பாரிஸில் தனது தோழியிடம் 2,738 மஞ்சள் நிற ரோஜாக்களுடன் காதலைக் கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
“ஒவ்வொரு மஞ்சள் ரோஜாக்களும், நாம் தொடர்பில் இருந்த ஒவ்வொரு நாட்களையும் குறிக்கிறது. நாம் Snapchat மூலம் அறிமுகமானோம். தற்போது நம்முடைய Snapchat ஸ்ட்ரீக்கின் எண்ணிக்கை 2738. அதனால் இங்கு 2738 ரோஜாக்களை கொண்டு வந்துள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்க்கையின் சிறந்த நாள் இன்று. என் வாழ்க்கையின் காதல் நீ லெய்னி. என்னுடைய முதல் நாளிலிருந்தே எனக்காக நீ நின்றாய். நமது முதல் சந்திப்பின் போது நான் உன்னிடம் கூறினேன், நான் ஒலிம்பிக்கிற்கு செல்கிறேன் என்று. அதற்கு எந்த கேள்வியும் கேட்காமல் சரி எனக்கூறி என்னை போக சொன்னாய். நீ அழகு, புத்திசாலி. என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் செலவிட விரும்புகிறேன்.
நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? ” என ஜெஸ்டின் மண்டியிட்டு தனது தோழியான லெய்னி டங்கனிடம் கேட்டான். அதற்கு ‘ஆம்’ என லெய்னி பதிலளித்துள்ளாள்.