மெக்சிகோவில் கனமழை - உயிரிழப்பு எண்ணிக்கை 130 ஆக உயர்வு!
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகே பசுபிக் கடலில் கடந்த 12 ம் தேதி புயல் உருவாகியது. இந்த புயலுக்கு ‘ரேமண்ட்’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் அந்நாட்டின் 32 மாகாணங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
தொடர் கனமழை காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன.
ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மெக்சிகோவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.