“தமிழ்நாட்டிற்கு 2,600 கன அடி நீரை திறந்து விட வேண்டும்!” - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழகத்திற்கு வரும் 23-ம் தேதி வரை 2,600 கன அடி நீரை திறக்க வேண்டும் என கர்நாடாக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது அவசர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவிரி சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் படி தமிழகத்திற்கு வரும் 23-ஆம் தேதி வரை 2,600 கன அடி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.