"ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு.." - ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு
இந்தியாவில் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவினர் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில், அவர் ஹரியானா மாநிலத்திலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
"தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை. நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன். ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார். 5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார். பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார். பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள், உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள்"
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்தார்.