நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 24 % உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்யப்படுவதாகவும், தற்போதைய எம்.பி.க்களின் சம்பளத்தில் 24 % அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கப்படவுள்ளதாகவும் இது வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தினப்படி ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மாதம் ரூ.25,000-ல் இருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்களுக்கு ஒரு வருடத்திற்கான கூடுதல் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.