For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை - 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!

உத்தரப் பிரதேசத்தில் 24 தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பின்பு மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து மைன்புரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11:52 AM Mar 19, 2025 IST | Web Editor
உ பி யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை   44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை
Advertisement

உத்தரப்பிரதேசத்தின் தெஹுலி கிராமத்திற்குள் கடந்த 1981 நவம்பர் 18 ஆம் தேதி நுழைந்த 17 பேர் கொண்ட கும்பல், பெண்கள் மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட  24 தலித்துகளை சுட்டுக் கொன்றது. சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் இந்த கொள்ளை கும்பல் நுழைந்தது.

Advertisement

ராதே-சந்தோஷ் கொள்ளை கும்பலுக்கு எதிராக நான்கு தலித் கிராமவாசிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததை அடுத்து இந்த படுகொலை நடந்தது. இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாதம் 19-ந்தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு மைன்புரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கொலைகள் நடந்ததிலிருந்து கடந்த 44 ஆண்டுகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 13 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். ராம் சேவக், கப்டன் சிங் மற்றும் ராம்பால் ஆகியோர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்நிலையில்தான் இந்த மூவரும் குற்றவாளிகள் என கடந்த 11ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 பேருக்கும் மரண தண்டனை வழங்கி, தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது. ராதே-சந்தோஷ் கும்பலின் உறுப்பினர்கள் பெரும்பாலும் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். தலித் கிராம மக்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த கொலைகள் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.

Tags :
Advertisement