"இந்தியாவின் 70 கோடி மக்களின் பணம் 22 பணக்காரர்களிடம் மட்டும் உள்ளது" - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு!
இந்தியாவின் 70 கோடி மக்களின் பணத்தின் அளவு 22 பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பரப்புரை செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவையில் பரப்புரை செய்கிறார்.
இதையும் படியுங்கள் : தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளை!
இந்நிலையில், ராஜஸ்தானின் பிகானிர் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் என இரண்டு முக்கிய பிரச்னைகள் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
"வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.பொதுமக்களின் குரலை உயர்த்துவதுதான் ஊடகங்களின் வேலை. ஆனால், அதைச் செய்ய அவர்களின் கோடீஸ்வர உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் 70 கோடி மக்களிடம் உள்ள பணத்தின் அளவு, 22 பணக்காரர்களிடம் உள்ளது.விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் இளைஞர்கள் வேலையில்லா சுழல் நிலவுகிறது. விலை உயர்வில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கும் பிரதமர் மோடி விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க மறுத்துவிட்டார். இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள். ஆனால் 15-20 தொழிலதிபர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். அந்த பணத்தை 24 ஆண்டுகளுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம்"
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.