#TVK மாநாடு அனுமதிக்கான 21 கேள்விகள்...இன்று பதில் அளிக்கிறார் புஸ்ஸி ஆனந்த்!
தவெக மாநாடு குறித்த 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸின் பதில் மனுவை, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று விழுப்புர மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கட்சியின் மாநில அளவிலான மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலை நேரில் சந்தித்து மனு அளித்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திருமால், இதுகுறித்து விழுப்புரம் எஸ்பி, டிஐஜியிடம் கூறியுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாநாடு நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாருங்கள் என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அறிக்கையும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாநாட்டுக்காக செய்யப்பட இருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அளித்தது.
இந்நிலையில் இந்த 21 கேள்விகளுக்கான பதில் மனுவை இன்று மாலை 5 மணி அளவில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷிடம் கட்சியினுடைய நிர்வாகிகள் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.