2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை , மக்கள் சந்திப்பு என தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தேர்தலை பொருத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தவெக என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
பாமக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. ஜனவரி அல்லது தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழ் நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை இறுதி செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழக சட்ட மன்றத்தேர்தல் 2026யை முன்னிட்டு தமிழ் நாட்டியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதனைடையே ராகுல் காந்தி பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டையும் பிரியங்கா காந்தியின் பேரணியையும் ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இக்குழுவில் கே.வி. தங்கபாலு, திருநாவுகரசு, ஜோதிமணி ஆகிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.