"களைகட்ட தொடங்கியது 2025 புத்தாண்டு கொண்டாட்டம்" - பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிப்பு !
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட 100,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு (டிச.31) இன்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் 90,000 போலீஸார், 10,000 ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 100,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்கள், சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெறும். இன்று இரவு பொதுமக்கள், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் (டிச.31) இன்று மாலை முதல் (ஜன.1) நாளை அதிகாலை 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் (ஜன.1) நாளை அதிகாலை 1 மணிக்குப் பின்னர் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை.
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காவல் துறையின் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். மோட்டார் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும். புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும் என்பதால் அப்பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிக்கபடும்.
மதுபோதையில் வாகனங்களை ஓட்டினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கபடும். சென்னை முழுவதும் 19,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் நிலையில் காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், 425 இடங்களில் வாகன தணிக்கை நடைபெறும். கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச் சாலை, ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதைத் தடுக்க 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் உள்பட சுமார் 100 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் நாளை வரை கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மெரீனா, எலியட்ஸில் மணல் பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை காவல் துறை அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்கள் ஆகியவற்றில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.