2024 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?
2024 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சா் வழங்கினாா்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், நீட் விவகாரங்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவி குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் அவர் குற்றச்சாட்டு சாட்டினார். அதேபோல உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவு கடைகளில் பெயர் பலகைகள் குறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கேள்வி எழுப்பினார்.
இதனை அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நாளை மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், மத்திய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
- மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு முழு பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சமூக-பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, அதேபோல 80-சி' பிரிவின் கீழ் வழங்கப்படும் வருமான வரி விலக்கு ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது நடுத்தர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதிய மசோதாக்கள் என்னென்ன?
- பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா
- 90 ஆண்டுகள் பழைமையான வானூர்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா
- நிதி மசோதா-2024
- காபி - விளம்பரப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதலுக்கான மசோதா
- ரப்பர் தொழிலை மேம்படுத்தவும், ரப்பர் வாரியத்தின் செயல்பாட்டை நவீனப்படுத்தும் மசோதா
உள்ளிட்ட 6 புதிய மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த ப்படவுள்ளன. இதுமட்டுமல்லாமல் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம்-1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், பொறுப்பு மாற்றம்) சட்டம் 1970 ஆகியவற்றில் திருத்தங்களும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.