For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024 தேர்தல் பிரசாரத்தில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு என பரவும் வீடியோ பழையது - உண்மை என்ன?

08:45 AM May 28, 2024 IST | Web Editor
2024 தேர்தல் பிரசாரத்தில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு என பரவும் வீடியோ பழையது   உண்மை என்ன
Advertisement

This news fact checked by NewsMeter

Advertisement

பஞ்சாப் மாநிலம் ஜலந்த்பூரில் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கிடைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து நியூஸ் மீட்டர் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

  பஞ்சாபில் பிரதமர் மோடியின் பேரணி - பரவும் வீடியோ :

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது. இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

குறிப்பாக பஞ்சாபில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதாவது ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சிரோமனி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் பஞ்சாப் மாநிலம் ஜலந்த்பூரில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார  பேரணியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் , முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் பங்கேற்றதாகவும் கேப்சனுடன் அந்த வீடியோ பரப்பப்பட்டது.

பிரதமர் மோடியின் வீடியோ பழையது

பிரதமர் மோடியின் வீடியோ குறித்து நியூஸ் மீட்டர் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. அதன்படி இந்த வீடியோ கீ ஃபிரேம்களை வைத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்த்ததில் இதே வீடியோ கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் வீடியோவை காட்டியது.  கொல்கத்தா பிரசார வீடியோ பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் 2019 ஏப்ரல் 3ம் தேதியில் பதிவேற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், மே 24, 2024 அன்று பிரதமர் மோடி ஜலந்தர் பகுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய வீடியோ குறித்து நியூஸ் மீட்டர் சரிபார்த்தது.  இந்த பேரணி குறித்த PTI பகிர்ந்த வீடியோவில் பிரதமர் மோடி காவி நிறத்தில் தலைக்கவசம் அணிந்திருப்பதை காட்டியது அதைத் தொடர்ந்து, பிரதமர் கூட்டத்தில் உரையாற்றும் 28 நிமிட வீடியோ அதே தேதியில் அவரது அதிகாரப்பூர்வ சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த  இரண்டு வீடியோவிலும் மோடி காவி தலைக்கவசம் அணிந்திருப்பதைக் காணலாம்.  ஆனால் வைரலான கிளிப்பில் அவர் காவி தலைக்கவசம் அணியவில்லை என்பதால் இது பழைய வீடியோதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

முடிவு:

பஞ்சாப் மாநிலம் ஜலந்த்பூரில் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கிடைத்ததாக பரவும் வீடியோ போலியானது எனவும் இது 2019ல் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by NewsMeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement