இன்னும் திரும்பி வராத ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்!
ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பி வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த போது 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, கடந்த மே 19-ம் தேதி, புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவும் முதலில் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வரை 97.26 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியிருப்பது தெரிய வந்துள்ளது. ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில், ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், அவற்றில் அக்டோபா் 31-ம் தேதி வரை 97.26% 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பி வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.