“தமிழ்நாட்டில் விதிகளை மீறிய 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" - மாநிலங்களவையில் வில்சன் எம்பி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் விதிகளை மீறி 20 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிஏஜி பரிந்துரையை மீறி சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று கவனஈர்ப்பு விவாதத்தில் திமுக எம்பி வில்சன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் நடைமுறைகளுக்கு மாறாக 5 சுங்கச்சாவடிகள் மாநகராட்சி, நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 60 கி.மீ. குறைவான இடைவெளியில் இரண்டு சுங்கச் சாவடிகள் அமைக்கப்படக் கூடாது என்கிற வரம்பும் உள்ளது. இந்த வரம்பை மீறி 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற ஏற்கெனவே மத்திய அரசு உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களுக்கு வரம்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால், பின்னர் சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (எண் 32) உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் ரூ. 28.54 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுக் கட்டணம் வசூலிக்கப்படாமல் 40 சதவீத கட்டணத்தை குறைக்க சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு இந்த கட்டணத்தை குறைக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை.
சுங்கக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த சுதந்திரமான அமைப்பு எதுவுமில்லை. முறையில்லாமல் சுங்கக் கட்டணங்களை உயர்த்தும் முறை என்பது சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் ஈட்ட மட்டுமே உதவுகிறது. சுங்கச்சாவடிகளில் செய்யப்படும் முதலீடுகள், வசூலிக்கப்பட்ட தொகை ஆகியவை பகுப்பாய்வு செய்ய ஒரு சுதந்திரமான அமைப்பு தேவை. அல்லது புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது 'ஒரு முறை' கட்டணமாக வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்”
இவ்வாறு திமுக எம்பி வில்சன் பேசினார்.