இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வருகை!
ஓராண்டுகளுக்கு மேல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20 மீனவர்கள் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்காக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஓராண்டுகளுக்கு மேல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனால் இலங்கை அரசு 20 மீனவர்களை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்களையும் இலங்கை அரசு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் தற்காலிக குடியுரிமை சீட்டுகளை அவர்களுக்கு வழங்கி இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு குடியுரிமை சோதனை மற்றும் சுங்க சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டது. சோதனை முடிந்து வெளியே வந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.