மாந்திரீகம் செய்வதாக பணம், நகை மோசடி - போலி சாமியார் உட்பட 2 பேர் கைது!
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் அங்கையற்கண்ணி (50). இவர் சில நாட்களுக்கு முன் மதுரை வழியாக திருச்செந்துாருக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருப்புக்கோட்டையில் ஏறிய உஷா என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனிடையே உஷா, அங்கையற்கண்ணியிடம் தனக்கு சிறுவயதிலேயே குறி சொல்லும் சக்தி உள்ளது என்றும் உங்கள் முகத்தை பார்த்தால் யாரோ செய்வினை வைத்துள்ளது போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய அங்கையற்கண்ணி தன் குடும்ப பிரச்னைகள் அனைத்தையும் கொட்டி தீர்த்துள்ளார். அவரது அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு பேருந்திலேயே 'குறி' சொன்னதற்காக ரூ.201 காணிக்கையை உஷா
பெற்றுக்கொண்டார். இதையடுத்து சென்னை திரும்பிய அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, 'என் குருஜி சிவக்குமார் மானாமதுரையில் உள்ளார். அவரை சந்தித்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பூஜைக்குரிய செலவுகளை மட்டும் ஜி பே மூலம் அனுப்ப கூறியுள்ளார். மேலும் உங்கள் வீட்டின் அடியில் வராஹி அம்மன் சிலை உள்ளது. அதன் மீது நீங்கள் நடப்பதால்தான் உங்களுக்கு பிரச்னை ஏற்படுவதாக குருஜி கூறினார். அந்த சிலையை எடுக்கும் பூஜைக்கு ரூ.15 லட்சம் செலவாகும்' என உஷா கூறியதால் அங்கையற்கண்ணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவரை சந்தித்த உஷா, 'முதற்கட்டமாக உங்களிடம் உள்ள தோடு, செயினை கொடுங்கள். அதை வைத்து பூஜை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். பின்னர் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கவும், பூஜைக்கு நகையும் தேவைப்படுகிறது என்றுக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் ரூ.11 லட்சம் பணம், 16 பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.
இதற்கிடையே வீட்டில் இருந்த நகைகள் மாயமானது குறித்து அங்கையற்கண்ணியிடம் மகள் கேட்க, மாந்திரீகம் விபரங்களை கூறி அதற்கு கொடுத்ததாக கூறினார். அதேநேரம் அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, மேலும் ரூ.2 லட்சம் பூஜைக்கு தேவைப்படுகிறது எனக் கூறினார். நேரில் தருவதாக கூறி தாயும், மகளும் மதுரை வந்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அறிவுரைபடி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உஷாவை அங்கையற்கண்ணி வரவழைத்தார். அவரிடம் இருந்து உஷா பணம் பெற்ற போது இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ.,தியாகப்ரியன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் உஷாவின் உண்மையான பெயர் சுடலையம்மாள் 35, எனத் தெரியவந்தது.
அவரது தகவலின்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் குறி சொல்லும் சிவக்குமாரை 41, போலீசார் விசாரித்தபோது, பலரிடம் மாந்திரீகம் செய்வதாக கூறி, நகை பணம் மோசடி செய்தது தெரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் அருகே சூடியூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டு 15 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்தை போலீசார் மீட்டனர். இதையடுத்து சிவக்குமாரும், சுடலையம்மாளும் கைது செய்யப்பட்டனர்.