“ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர்!” - இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் மூண்டது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இருந்தபோதிலும் லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானில் ஹமாஸின் இராணுவப் பிரிவில் இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன்படி, முகமது ஹுசைன் அலி மற்றும் நயிஃப் அலி ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கிய பங்காற்றியவர்கள் எனவும் அந்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.