பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த 2 தீட்சிதர்கள் கைது!
சிதம்பரத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயரில் போலிச் சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்த 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சரகம் மீதிகுடி - கோவிலாம் பூண்டி இடையே சாலையோரமாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்கள் மூட்டை, மூட்டையாக கிடந்தன. அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையில் காவல் துறையினர் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர் தீட்சிதர் (37), மீதிகுடியைச் சேர்ந்த நாகப்பன் (48) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய கணினி, லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இருவரும் சுமார் 5000-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மற்றும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. போலிச் சான்றிதழ்கள் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.